திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 3 பயணிகளிடம் விசாரணை.

Update: 2019-08-22 22:45 GMT
திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், கொச்சி, பெங்களூரு, சென்னை உள்பட உள்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் 24 மணி நேரமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர், ‘குருவி’கள் போல செயல்பட்டு தங்கம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கம் கடத்தி வருபவர்களை தினந்தோறும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி பிடித்தாலும் தங்கம் கடத்தல் தினமும் நடந்த வண்ணமே உள்ளது.

சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திட்டக்குடியை சேர்ந்த அன்பழகன், புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் ஆகிய இருவரிடமிருந்தும், துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த அகமது பைசல் என்ற பயணியிடம் இருந்தும் மொத்தம் 977 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் 726 கிராம் சங்கிலி வடிவில் ஆபரண தங்கமாகவும், 251 கிராம் தங்கம் ‘பேஸ்ட்’ வடிவிலும் மறைத்து எடுத்து வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.36 லட்சத்து 65 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் கடத்திவந்ததாக சிக்கிய 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்