ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கோர்ட்டில் சரண்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலம்

ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் ஒரத்தநாடு கோர்ட்டில் சரண் அடைந்தனர். போலீஸ் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது.

Update: 2019-08-22 23:00 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே வாலிபர் ஒருவரை மர்மகும்பல் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்த்த சங்கர்லால் (வயது 35) என்பதும், சிதம்பரம் பகுதியில் கூலிப்படையாக செயல்பட்டு வந்தவர் என்பதும், இவர் மீது பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

இவர் தனது நண்பரான சுரேந்தரின் உறவினர் அருணாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை சுரேந்தர் கண்டித்துள்ளார். அருணாவிடம் தவறாக நடக்க முயன்ற திருப்பூரை சேர்ந்த தனது நண்பரான ராஜாவின் கையை சங்கர்லால் வெட்டி துண்டாக்கி உள்ளார் என்பது தெரியவந்தது.

சுரேந்தர் மற்றும் ராஜா தரப்பினர் சங்கர்லாலை பழிவாங்க காத்திருந்தனர். கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்த சங்கர்லால் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பன்னுர் கிராமத்தில் அருணாவுடன் தங்கி இருந்தார்.

கடந்த திங்கட்கிழமை சங்கர்லால் அருணாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனம் உடைந்த அருணா விஷம் குடித்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவுடி சங்கர்லால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கோர்ட்டில் ராஜா (28), சதீஷ் (31), அருள்ராஜ் (26), சாந்தகுமார் (35), அருண்குமார் (29), முத்து (30), பிரவீன் (32), ஆகியோர் சரண் அடைந்தனர்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீபெரும்புதூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்