பெரம்பலூர் சிலோன் காலனியில் கால்வாய்களை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பெரம்பலூர் சிலோன் காலனியில் கால்வாய்களை சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-22 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலம் அருகே உள்ள சிலோன் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த காலனியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கால்வாய்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில இடங்களில் கால்வாய்கள் அமைத்ததற் கான அறிகுறிகள் இல்லாமல் உள்ளதாம். கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் அந்தப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் சிலோன் காலனியில் மழைநீர், கால்வாயில் செல்லமுடியாமல், வீடுகளில் புகுந்தது.

நகராட்சி அலுவலகம் முற்றுகை

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அப்போதும் அதிகாரிகள் வந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை யாம். இதனால் ஆத்திரமடைந்த சிலோன் காலனி பொதுமக்கள் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தி நேற்று ஒன்று திரண்டு வந்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கால்வாய்களை சீரமைக்க நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் கோரிக்கை தொடர்பான மனுவினை நகராட்சி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்