ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை: சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2019-08-22 23:15 GMT
திருச்சி,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து நிதி மந்திரியாக இருந்த ஒரு அரசியல்வாதி, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழகத்துக்கு தலைகுனிவு என்று தான் சொல்லவேண்டும். வேட்டி கட்டிய தமிழர்கள் டெல்லியில் கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள். காமராஜர் போன்ற தூய்மையான அரசியல்வாதிகளை பார்த்த நாம், இன்று வேட்டி கட்டிய ஒரு தமிழரான சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது எப்படி என்று சொல்வதற்கு இல்லை. அது மட்டுமல்லாமல் இந்த வழக்கை அவர் எதிர்கொண்ட விதம் உண்மையிலேயே மோசமான முன்னுதாரணம்.

காலையில் சம்மன் வந்தவுடனேயே விசாரணைக்கு ஆஜராகி இருக்கலாம். 27 மணி நேரம் அவர் தலைமறைவாக இருந்து இருக்கிறார். ப.சிதம்பரத்துடன் பரிவர்த்தனையில் பங்கு கொண்ட இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி இருக்கிறார். அவரிடம் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. அதன் மீதுதான் விசாரணை என்று தெரிவிக்கிறார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

வீட்டை பூட்டிக்கொண்டு சம்மனுக்கு மதிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை நடைபெற்றிருக்கிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை, குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்று அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. நேர்மையானவர்களாக இருந்தால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. அவரது வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாக அது இருக்கும். இந்த போராட்டத்தை ஏன் நடத்துகிறார்கள்? என்று தெரியவில்லை. அங்கு ஓட்டு வங்கிக்காக செய்தாலும் அந்த மக்கள் இவர்களை ஆதரிக்கப் போவதில்லை. எப்படி ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசி ஒரு தலைகுனிவை ஏற்படுத்திக் கொண்டாரோ, அதேபோன்றுதான் இந்த ஆர்ப்பாட்டமும் அவருக்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தும். தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தேர்தலில் போட்டி என்று எதுவுமில்லை. மண்டல அளவில் கிளை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பிறகு தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்