மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்: கடைக்குள் நுழைய முயன்ற பெண் வக்கீலால் பரபரப்பு

குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம், கடைக்குள் நுழைய முயன்ற பெண் வக்கீலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-22 23:15 GMT
திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த மணலி புதுநகர் குடியிருப்பு-3 பகுதியில் பார் வசதியுடன் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடைக்கு, ஆரம்பத்தில் இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த காருண்யாதேவி(வயது 38) என்ற பெண் வக்கீல், குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று மாலை சில பெண்களுடன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். திடீரென அவர், மதுபானம் வாங்கி குடிக்கப்போவதாக கூறிவிட்டு கடைக்குள் நுழைய முயன்றார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார், மதுபான கடைக்குள் நுழைய முயன்ற காருண்யா தேவியை மடக்கி பிடித்து, போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அவரது காரிலேயே போலீஸ் நிலையம் அழைத்து சென்று, விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்