சி.பி.ஐ. இயக்குனரின் உருவப்படத்தை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 40 பேர் கைது

புதுக்கோட்டையில் சி.பி.ஐ. இயக்குனரின் உருவப்படத்தை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-22 23:00 GMT
புதுக்கோட்டை,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர்கள் முருகேசன், தர்மதங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், குட்லக் முகமது மீரா, மாவட்ட துணை தலைவர் தமிழ்ச்செல்வன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

40 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசை கண்டித்தும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாககுற்றம்சாட்டியும், மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சி.பி.ஐ. இயக்குனரின் உருவப்படத்தை காலணியால் அடித்தனர். மேலும் ப.சிதம்பரத்தை விமர்சனம் செய்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சி.பி.ஐ. இயக்குனரின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீசார் உருவப்படத்தை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று தலைமை தபால் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்