கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-22 21:30 GMT
கோவில்பட்டி,

கயத்தாறு தாலுகா கொத்தாளி கிராமத்தில் தனியார் நிலத்தில் கிணறு தோண்டும்போது, வெளியே சரள் மண் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதனை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில், விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று, பொக்லைன் எந்திரம் மூலம் 3 டிராக்டர்களில் ஏற்றிச் சென்றனர். அப்போது அங்கு ரோந்து சென்ற நாரைக்கிணறு போலீசார், கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற அனுமதி காலம் முடிந்ததாக கூறி, அந்த 3 டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை கண்டித்தும், பறிமுதல் செய்த டிராக்டர்கள், பொக்லைன் எந்திரத்தை விடுவிக்க வலியுறுத்தியும், தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில தலைவர் நாராயணசாமி, துணை தலைவர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம், உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்