கனிராவுத்தர் குளம் மீட்புக்குழு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 21 பேர் கைது

ஈரோடு கனிராவுத்தர் குளம் மீட்புக்குழு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-22 22:15 GMT
ஈரோடு,

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கனிராவுத்தர் குளத்தின் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கனிராவுத்தர்குளம் மீட்பு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

தற்போது கனிராவுத்தர் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு மீட்புக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை பாதுகாக்க குளத்தை மூடி சாலை அமைக்கக்கூடாது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவை அவமதிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக ஈரோடு மாநகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், நீரோடை அமைப்பின் தலைவருமான நிலவன் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று காலை ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் கனிராவுத்தர் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

அவர்கள் பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியை கடந்து வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு ஆகியோர் போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தினார்கள்.

மாநகராட்சி அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று மறுப்பு தெரிவித்து கைது செய்தனர்.

இந்த போராட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தலைவர் கணகுறிஞ்சி, காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பெரியசாமி, சாமானிய மக்கள் நலக்கட்சியின் மாவட்ட தலைவர் குணசேகரன், தமிழர் கழகம் கட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு இளைஞர்கட்சி மாவட்ட செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, நாம்தமிழர் கட்சி நிர்வாகி தமிழ்ச்செல்வன், த.மு.மு.க. பொறுப்பாளர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு பெரியார் மன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கனிராவுத்தர் குளத்தை மீட்கக்கோரி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் காரணமாக பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்