திண்டுக்கல்லில் தடையை மீறி தயாரிக்கப்பட்ட 3½ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் - அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்லில் தடையை மீறி தயாரிக்கப்பட்ட 3½ டன் பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-22 22:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், நள்ளிரவு நேரத்தில் லாரிகளில் கொண்டு வந்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதை அறிந்த அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி, 2 லாரிகளில் கொண்டு வரப்பட்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே ஒருசில நிறுவனங்களில் ரகசியமாக தடையை மீறி, பாலித்தீன் பைகளை தயாரிப்பதாக புகார்கள் வந்தன. இதனால் மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு நிறுவனத்தில் பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாலை 5 மணி அளவில் திண்டுக்கல் முருகபவனத்தில் ஒரு நிறுவனத்தில் மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் தயாரித்து கொண்டிருந்தனர். மேலும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக மூட்டை, மூட்டையாக பாலித்தீன் பைகள் இருந்தன.

மொத்தம் 3½ டன் பாலித்தீன் பைகள் இருந்தன. இதைத் தொடர்ந்து பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை லாரியில் ஏற்றி பாலித்தீன் பைகள் அரவை கூடத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்