ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மயான வசதி கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை தொடர்ந்து மயான வசதி கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-22 22:30 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் பள்ளிகொண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் உள்பட 4 பேருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்தனர். நிலத்தின் உரிமையாளர்களான 4 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அப்துல்ரகுமான் உள்பட 4 பேரும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் தங்கள் இடத்தில் பிணங்களை புதைத்து வருகின்றனர். எனவே தங்கள் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்களையும் அகற்றி தர வேண்டும் என்றும், சுற்றுச்சுவர் எழுப்ப பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களது இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை முன்னிலையில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனிமலை பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் எதிரில் எங்கள் பகுதி மக்கள் உயிரிழந்தால் புதைக்க மயான வசதி வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை சுமார் 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஒருதரப்பினர் திருவண்ணாமலை உதவி கலெக்டரை நேரில் சந்தித்து மயான வசதி கேட்டு பேசினர்.

மேலும் செய்திகள்