ப.சிதம்பரம் கைது விவகாரம், தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும் - கவர்னர் கிரண்பெடி கருத்து

தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும் என ப.சிதம்பரம் கைது குறித்து கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்தார்.

Update: 2019-08-22 23:00 GMT
புதுச்சேரி, 

புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கழிவுநீர் வாய்க்கால்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று அரவிந்தர் ஆசிரம நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு இந்த வாய்க்கால்களை கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். இதேபோல் பெரியவாய்க்கால் மற்றும் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு வாய்க்கால்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் மழைநீர் தேங்காமல் இருக்க தொடர் நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவிட்டார்.

அப்போது அவரிடம் கவர்னரின் அதிகாரம், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட நிலவரம் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:-

மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அது அடுத்த மாதம் 4-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது என்ன முடிவு கூறப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும்வரை காத்திருப்போம்.

ப.சிதம்பரம் நிதி மற்றும் உள்துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார். ஆதாரமில்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது. ஆதாரங்களை ஆராய்ந்து ஜாமீன் வழங்கலாமா? கூடாதா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

தலைமை என்பது பதவி கிடையாது. அது ஒரு பொறுப்பு. அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கான நலன் இருக்கவேண்டும். தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும். அதேபோல் நன்மை செய்தால் அதற்கான வெகுமதியை தானாகவே இயற்கை வழங்கும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார். 

மேலும் செய்திகள்