வில்லியனூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றம்; பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

வில்லியனூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றப்பட்டது. அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-23 22:30 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் அருகே ஒத்தவாடை புதுநகரில் பாசன வாய்க்கால் ஓடுகிறது. இதை ஆக்கிரமித்து அய்யனார் என்பவர் வீடு கட்டி கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த வீடு பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு செல்ல இடையூறாக இருப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் கவர்னர் கிரண்பெடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற புதுநகருக்கு நேற்று காலை வந்தனர். அப்போது வீட்டுடன், அருகில் உள்ள அம்மன் கோவிலையும் அகற்றப்போவதாக தகவல் பரவியது. இதை அறிந்து, அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அய்யனார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலவச வீட்டு மனைப்பட்டா, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மானியத்தொகை பெற்றுத்தருவதாக நமச்சிவாயம் உறுதியளித்தார்.

மேலும் அருகில் உள்ள அம்மன் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், கோவிலை அகற்றவில்லை என்று கூறினார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர். சிறிது நேர பரபரப்புக்கு பின் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய வீடு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்