போலீஸ் நிலைய ஜன்னல் கண்ணாடி உடைப்பு: பெண் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் - முன்னாள் கணவர் கைது

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலைய ஜன்னல் கண்ணாடியை உடைத்து, பெண் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-23 22:45 GMT
திருவண்ணாமலை,


திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கலைவாணி (வயது 35), கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (42). டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தீபக் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதன்மை சார்பு நீதிமன்றம் மூலம் 2018-ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கலைவாணி தனது மகனுடன் முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு கலைவாணி கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது அங்கு வந்த பிரபாகரன் கலைவாணியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடியையும் அவர் உடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் கலைவாணியின் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்து அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கலைவாணி திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

மேலும் போலீஸ் நிலைய ஜன்னல் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு தனியாக கீழ்பென்னாத்தூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்