சதுர்த்தி விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-24 22:30 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர், நரங்கியப்பட்டு, வெள்ளாளவிடுதி ஆகிய பகுதிகளில் மண்பாண்டங்கள், மண் சிற்பங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில் தயாரிக்கும் மண்பாண்டங்கள் மற்றும் சிற்பங்கள் தமிழக அளவில் பிரசித்தி பெற்றவை. பலவிதமான வடிவங்களில் கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ரசாயன கலப்பின்றி முழுவதும் களிமண்ணாலான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் கறம்பக்குடி பகுதி தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வலம்புரி விநாயகர், சித்தி விநாயகர், மங்கள விநாயகர், மணக்கோல விநாயகர், ஞானப்பழ விநாயகர், சிம்ம வாகன விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை...

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சிலைகளுக்கான முன்பதிவு மற்றும் விற்பனை களைகட்டி உள்ளது. வெளிமாவட்டங்களிலும் ஏராளமானோர் கறம்பக்குடி பகுதிக்கு வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். அரசு உத்தரவுப்படி 2 அடி முதல் 6 அடி வரையிலான சிலைகள் செய்யப்படுகின்றன. சிலைகளின் உயரம், தரம், வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மண்சிற்ப கலைஞர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வடமாநிலங்களிலும், தமிழகத்தின் பெரிய நகரங்களிலும் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா தற்போது குக்கிராமங்களிலும் கொண்டாடப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு சிலைகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இங்கு செய்யப்படும் சிலைகள் இயற்கையான களிமண்ணால் செய்யப்படுகிறது. இந்த சிலைகள் நீர்நிலைகளை மாசுப்படுத்தாது. தற்போது சிலைகளில் விதைகளை பதித்து பசுமை விநாயகரை உருவாக்கி உள்ளோம். அவற்றை நீர்நிலைகளில் கரைக்கும்போது குளம் மற்றும் ஆற்றங்கரைகளில் விதை முளைத்து மரமாக வளர வாய்ப்பு உள்ளது’ என்றார். 

மேலும் செய்திகள்