அமராவதி-காவிரியாற்றில் மணல் கொள்ளையை தடுத்து நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும்

கரூரில் அமராவதி, காவிரியாற்றில் மணல் கொள்ளையினை தடுத்து நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-08-24 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 10-வது மாநாடு கரூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். மாநாட்டை மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெயராம், மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையானது கல்வியை முற்றிலும் தனியார் மயப்படுத்தும் நோக்கிலும், ஆசிரியர்கள்-கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக புதிய கல்வி கொள்கை வரைவினை திரும்பபெற வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5,800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் பலர் பதவி உயர்வு வாய்ப்பினை இழந்து வருகின்றனர். எனவே இந்த வழக்குகளை ரத்து செய்து ஆணை வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

அவுட்சோர்சிங் முறையில் பணிநியமனம் என்கிற வகையில் அறிவிக்கப்பட்ட அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 21 மாத கால ஊதிய நிலுவைத்தொகையினை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்து உள்ள கடந்த ஜூலை முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு 5 சதவீதம் உயர்வினை உடன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கரூரில் அமராவதி, காவிரியாற்றில் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்தி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும். மாலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து பணி முடித்து ஊழியர்கள் கரூர் ரெயில்நிலையத்திற்கு செல்லும் வகையில் போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

கரூரில் சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்து முறையான சுத்தி கரிப்பு நிலையம் அமைத்து சாயப்பட்டறை தொழிலையும், விவசாயத்திற்கு தூயநீர் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். கரூர் மற்றும் குளித்தலையில் ஒருங் கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட துணை தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஜான்பாஷா உள்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்