பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் எதிரொலி: திருச்சியில் 2-வது நாளாக போலீசார் சோதனை

பயங்கரவாதிகள் ஊடுரு வியதாக தகவல் பரவியதால் திருச்சியில் 2-வது நாளாக போலீசார் சோதனை நடத்தினர். ஸ்ரீரங்கம் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-08-24 23:00 GMT
திருச்சி,

பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியதாக தகவல் பரவியதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாநகரில் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர். சோதனைச்சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்து அனுப்பினர். மாநகரில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தங்களது கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர்.

ஸ்ரீரங்கம் கோவில்

இதேபோல் வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னர் போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியில் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பிற கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர். திருச்சி விமானநிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர். விமானநிலையத்திற்கு வரும் மற்றும் விமானங்களில் வந்திறங்கும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே, அவர்களை செல்ல அனுமதிக்கின்றனர்.

மேலும் செய்திகள்