திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ‘அல்வா பொட்டலங்கள் இருந்தன’

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பையில் அல்வா பொட்டலங்கள் இருந்தன.

Update: 2019-08-24 23:00 GMT
திருச்சி,

பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 2-வது நடைமேடையில் தண்டவாளத்தில் ஒரு மர்ம பை கிடந்தது. இதனை அங்குள்ள ரெயில்வே ஊழியர்கள் கண்டனர். அவர்கள் இது குறித்து உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அல்வா பொட்டலங்கள்

ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பையை சோதனையிட்டனர். இதில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பையை திறந்து பார்வையிட்டனர். அதில் துணிகள் மற்றும் அல்வா பொட்டலங்கள் இருந்தன. மேலும் ஆதார் அட்டை ஒன்றும் இருந்தது. அதில் தஞ்சாவூரை சேர்ந்த அய்யம்பெருமாள் என்ற பெயர் இருந்ததை கண்டனர்.

அந்த அட்டையில் இருந்த செல்போன் எண்ணிற்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில் மறுமுனையில் பேசிய நபர், அய்யம்பெருமாளின் மனைவி என்று தெரிவித்துள்ளார். மேலும், அய்யம்பெருமாள் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும், அவர் ரெயிலில் தஞ்சாவூருக்கு பயணித்ததும், பயணத்தின்போது அவர் பையை தவறவிட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை திருச்சி வந்து பையை வாங்கி செல்லுமாறு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர்.

பரபரப்பு

இதற்கிடையே தண்டவாளத்தில் மர்ம பை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தீவிர சோதனை நடந்து வருகிற நிலையில், மர்ம பை கிடந்த சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்