திண்டிவனம் அருகே,கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே தென்களவாய் கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-24 22:30 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே தென்களவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பச்சைவாழியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் உண்டியல் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விசேஷ நாட்களில் மட்டும் அந்த உண்டியல் கோவில் பிரகாரத்தில் வைக்கப்படும்.

இந்த நிலையில் நேற்று காலையில், இக்கோவில் உண்டியல் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. ஆனால் அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கோவிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது பச்சைவாழியம்மன் சன்னதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி சங்கிலி மற்றும் வெள்ளி சரடுகளை காணவில்லை. மேலும் உண்டியல் வைக்கப்பட்டிருந்த அறை கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் முனீஸ்வரன் கோவிலுக்கு வந்த மர்மநபர்கள், அம்மன் சிலையில் இருந்த நகைகளை திருடியுள்ளனர். பின்னர் அங்கிருந்த அறைக்கதவின் பூட்டை உடைத்துள்ளனர். இதையடுத்து உண்டியலை எடுத்துக்கொண்டு கிராம எல்லையில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று அங்கு வைத்து உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், சரவணன்(40), பாதிராப்புலியூரை சேர்ந்த ரிதாஸ்(60), விளங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த அரிதாஸ்(41) ஆகியோருடைய வீட்டிலும் மர்மநபர்கள் பணம் மற்றும் நகைகளை திருடிச்சென்றுள்ளனர். தற்போது முனீஸ்வரன் கோவிலிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். எனவே திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்