கடலூரில் பரபரப்பு; தென்பெண்ணையாற்றில் 2 வாலிபர்கள் பிணம் - போலீசார் விசாரணை

கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று 2 வாலிபர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் குடிபோதையில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

Update: 2019-08-24 22:30 GMT
கடலூர்,

புதுச்சேரி மாநிலம் கும்தாமேடு பகுதியில் சாராயம் மற்றும் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடலூரில் இருந்து தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கும்தாமேடு பாலம், சின்ன ஆராய்ச்சிக்குப்பம் மண்பாலம் வழியாக குடிபிரியர்கள் சென்று குடித்து விட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சின்ன ஆராய்ச்சிக்குப்பத்தில் உள்ள மண்பாலம், தண்ணீர் வரத்தால் சேதமடைந்து விட்டது. தற்போது அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இருப்பினும் சிலர் அந்த வழியாக சென்று மது, சாராயம் குடித்து விட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண்கள் 2 பேர் அந்த மண் பாலம் அருகில் உள்ள தண்ணீரில் பிணமாக மிதந்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடன் அவர்கள் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனாலும், அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அதில் ஒருவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து தண்ணீரில் பிணமாக கிடந்த 2 பேரையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது பற்றிய புகாரின் பேரில், அவர்கள் 2 பேரும் குடிபோதையில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? அவர்கள் 2 பேரும் நண்பர்களா? அல்லது தனித்தனியாக மது குடிக்க சென்றவர்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் கடலூர் புதுநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். இருப்பினும் ஒரே இடத்தில் 2 பேர் இறந்து கிடந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்