தமிழகத்தில் 8 ஆண்டுகளில் 440 நீதிமன்றங்கள் திறப்பு-அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 440 நீதிமன்றங்கள் புதிதாக திறக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Update: 2019-08-24 23:15 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் நேற்று அரசு சட்டக்கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து துறைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக செய்து முடித்துள்ளார். நீதித்துறையும் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களுக்கு நீதி விரைந்து கிடைக்கவேண்டும் என்பதற்காக எங்கே வழக்குகள் தேங்கியதோ அங்கும், அதிக வழக்குகள் பதிவாகும் பகுதியிலும் புதிய நீதிமன்றங்களை தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் 223 நீதிமன்றங்களை தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் முதல்-அமைச்சர் 217 நீதிமன்றங்களை தொடங்க அனுமதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள நீதிமன்றங்களின் எண்ணிக்கை 1,146 ஆகும். அவற்றில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 440 நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் இந்த அரசு நீதித்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்.

இதேபோல் நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.211 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நீதித்துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,111 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 90 சதவீத அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அரசு சட்டக்கல்லூரிகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் 2008-ம் ஆண்டு வரை 8 கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளாக சட்டக்கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் மொத்தமாக சட்டக்கல்லூரிகளில் 10 ஆயிரத்து 526 ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 5 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே 2 ஆண்டுகளில் 6 புதிய அரசு சட்டக்கல்லூரிகளை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதனால் தமிழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் சட்டக்கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் நமது அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்த கட்டணம் ரூ.6 ஆயிரத்து 310 மட்டுமே. எனவே மாணவ, மாணவிகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நாமக்கல்லில் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த சட்டக்கல்லூரி மட்டும் அல்ல, இந்த ஆண்டில் தொடங்கப்பட்ட 3 கல்லூரிகளுக்கும் காரணம் அமைச்சர் தங்கமணிதான் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்