ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு இடையூறு; 24 பேர் மீது வழக்கு பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை

ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்ததாக 24 பேர் மீது தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-08-24 22:15 GMT
தஞ்சாவூர்,

ரெயில்களில் சிலர் படிக்கட்டுகளில் நின்று பயணிகளுக்கு இடையூறு செய்வதாகவும், புகை பிடிப்பதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மண்டல ரெயில்வே போலீஸ் கமிஷனர் எம்.எப்.மொய்தீன் உத்தரவிட்டார். அதன்படி தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் ரெயில்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் திருச்சி- காரைக்கால், தஞ்சாவூர் - திருச்சி இடையே இயக்கப்படும் ரெயில்கள் உள்பட பல்வேறு ரெயில்களில் விதிமுறைகளை மீறி யாராவது பயணம் செய்கிறார்களா? என சோதனை மேற்கொண்டனர்.

இதில் படிக்கட்டில் பயணம் செய்தல், பயணிகளுக்கு இடையூறு செய்தல், ரெயிலுக்குள் புகை பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல் களில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த காமராஜ் (வயது 45), திருவிடை மருதூரை சேர்ந்த கார்த்திக் (20) உள்ளிட்ட 24 பேரை போலீசார் பிடித்தனர்.

ரூ.7,700 அபராதம்

பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மொத்தம் ரூ.7,700 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 24 பேரையும் கடும் எச்சரிக்கைக்கு பிறகு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்