தமிழகத்தில் கொலை- கொள்ளைகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளைகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2019-08-24 23:15 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி பல்வேறு வகைகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டது. சேலத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நீர் நிலையை அழித்து அடுக்குமாடி கட்டிடம் கட்ட முதல்-அமைச்சரே அடிக்கல் நாட்டி இருக்கிறார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முறையாக ஆறுகளுக்கும், கால்வாய்களுக்கும் செல்லவில்லை. கடந்த ஆண்டு முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பு இன்னும் சரிசெய்யப்படவில்லை. தற்காலிக சீரமைப்பு பணிகூட இன்னும் முடிவடையாமல் உள்ளது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. கூலிப்படைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கவுரவக் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் அதிகமாகியுள்ளது. இதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. எல்லா வகையிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு ஆட்சி செய்யக்கூடிய தார்மீக உரிமையை இழந்துவிட்டது. நாட்டில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நிதி ஆயோக் துணைத்தலைவர்கூட பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வராக்கடன்

ஆனால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதை மூடிமறைக்க முயல்கிறார். பொருளாதார நெருக்கடியை அவர் சமாளிக்க சில திட்டங்களை அறிவித்துள்ளார். அது எந்த அளவுக்கு பலன் தரும் என தெரியவில்லை. பட்ஜெட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் பொருளாதாரத்தை நசுக்கியது இந்த நிலைக்கு காரணமாகும். குறிப்பாக வாகன தொழில் முற்றிலுமாக முடங்கி விட்டது. வங்கிகளில் வராக்கடன் வசூலிப்பு என்ற பெயரில் சாதாரண மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய கடன் தொகையை வராக்கடன் என்ற பட்டியலில் வைத்துள்ளது. முதலில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய கடன் தொகையை இந்த அரசு முழுமையாக வசூலிக்க வேண்டும்.

ஒரே கல்வி, ஒரே தேர்தல் என ஒரு சர்வாதிகார போக்கை இந்த அரசு நடத்தி வருகிறது. இதை எதிர்த்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். பிரதமர் ஆனாலும் சரி, உள்துறை மந்திரி ஆனாலும் சரி, நிதி மந்திரி ஆனாலும் சரி இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ அதைச் செய்து வருகிறார்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல. பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே காஷ்மீர் விவகாரம், முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் கைது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களை நசுக்கி ஒரே இடத்தில் அதிகார குவியல் என்ற நிலையை மத்திய அரசு ஏற்படுத்த முயல்கிறது. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை சரிசெய்ய மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாகர்கோவில் மாநகராட்சியில் சாலைகள் மிகமோசமாக உள்ளன. அதை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

பேட்டியின்போது குமரி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் சுபாஷ் சந்திரபோஸ், இசக்கிமுத்து, ராமகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்