தஞ்சையில் நடந்த திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கு விதைப்பந்துகள் அட்டைப்பெட்டியில் அடைத்து வழங்கப்பட்டன

தஞ்சையில் நடந்த திருமண விழாவுக்கு வந்தவர் களுக்கு விதைப்பந்துகள் அட்டைப்பெட்டியில் அடைத்து வழங்கப்பட்டன.

Update: 2019-08-25 22:30 GMT
தஞ்சாவூர்,

திருமண விழாக்களில் மொய் செய்பவர்களுக்கு தாம்பூலக்கவரில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவை வழங்கப்பட்டு வந்தன. நாளடைவில் வாழைப்பழத்துக்கு பதில் தேங்காய், எலுமிச்சைப்பழம் போன்றவை வழங்கப்பட்டன. அதன் பின்னர் பிஸ்கட் பாக்கெட், இனிப்பு பண்டங்கள், முறுக்கு போன்றவை டிபன்பாக்சில் அடைத்து வழங்கப்பட்டு வந்தன.

இன்னும் சில இடங்களில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் தற்போது தஞ்சையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், விழாவுக்கு வந்த 1,000 பேருக்கு தாம்பூலக்கவருக்கு பதிலாக 5 ஆயிரம் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

விதைப்பந்துகள்

இந்த விதைப்பந்துகளை செங்கழுநீர் ஏரி சீரமைப்புக்குழுவினர் மற்றும் மன்னர் சரபோஜி கல்லூரி விடுதி மாணவர்கள் இணைந்து வழங்கினர். விதைப்பந்துகளை சிறிய அட்டைப்பெட்டியில் வைத்து வழங்கினர். ஒரு அட்டைப்பெட்டியில் 5 விதைப்பந்துகள் வீதம் இருந்தன. இதில் வேம்பு, புங்கன், நாவல், அத்திமர விதை ஆகிய விதைகள் இருந்தன. இதனை திருமண விழாவுக்கு வந்தவர்கள் ஆவர்முடன் வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து செங்கழுநீர் ஏரி சீரமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், “கஜா புயல் பாதிப்பால் தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல் சாலை விரிவாக்க பணிக்காகவும் மரங்கள் அகற்றப்பட்டன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே விதைப்பந்துகள் தயாரித்து சாலையோரங்களில் விதைத்தோம்.

ஆர்வமுடன் வாங்கினர்

தற்போது எனது நண்பனின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு வருபவர்களுக்கு சற்று வித்தியாசமாக விதைப்பந்து வழங்க முடிவு செய்து வழங்கினோம். விதைப்பந்துகளை மணமக்கள் பெயர் பொறித்த ஒரு சிறிய அட்டைப்பெட்டையில் அடைத்து வழங்கினோம். விதை, அட்டைப்பெட்டிகளுக்கு என மொத்தம் ரூ.3 ஆயிரம் வரை செலவு ஆனது. விதைப்பந்துகள் குறித்து தெரிவித்தால் என்ன என்பதை மக்களும் அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் ஆர்வமுடன் கேட்டு வாங்கிச்சென்றனர்.

முன்பு மரக்கன்றுகள் வழங்கப் பட்டன. ஆனால் அதை சிலர் தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் விதைப்பந்துகளை தூக்கி எறிந்தாலும் அது மரமாக முளைத்து விடும். இந்த விதைப்பந்துகள் மண் உருண்டையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் விதைகள் 6 மாதம் வரை உயிர்த்தன்மையுடன் இருக்கும். இந்த விதைகள் பண்ணைகளில் இருந்து வாங்கி வந்து தயாரித்தோம். மழை பெய்தால் மண் கரைந்து விதைகள் முளைக்கும். இதே போன்று மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் திருமண விழா, கோவில் விழாக்கள் போன்றவற்றில் விதைப்பந்துகள் வழங்க வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்கு வழங்க உள்ளோம். அதற்கு அவர்கள் விதைகள் மற்றும் அட்டைப்பெட்டி போன்றவற்றை வாங்கி கொடுத்தால் போதும். நாங்களே விதைப்பந்துகளை தயாரித்து சேவையாக இதனை வழங்குவோம்”என்றார்.

மேலும் செய்திகள்