கரூர் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடியில் 9,650 எல்.இ.டி. விளக்குகள்

கரூர் நகராட்சி பகுதியில் ரூ.7½ கோடி மதிப்பீட்டில் 9,650 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-08-25 23:15 GMT
கரூர்,

கரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி பாலம்மாள்புரம், வ.உ.சி. தெரு, மக்கள் பாதை, சின்ன ஆண்டாங்கோவில், திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதில் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்பட பொது பிரச்சினை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா உள்பட தனிநபர் கோரிக்கை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மனுக்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார். பின்னர் அவர் பேசியதாவது;-

குடிநீர் இணைப்புகள்

கரூர் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடியே 55 லட்சம் மதிப்பில் 9,650 எல்.இ.டி. விளக்குகள் அமைத்து புதுப்பொலிவு பெற உள்ளது.

அதே போல் 48,500 குடிநீர் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கி மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.கரூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் பெற்று வந்த முதியோர் உதவித்தொகையை தற்போது 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பெற்று வருகின்றனர். இவ்வாறாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி மக்களுக்கான அரசாக தமிழக அரசு உள்ளது. எனவே அரசு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஈஸ்வரன், கரூர் வட்டாட்சியர் அமுதா மற்றும் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்