திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்தவர் சிறையில் அடைப்பு

திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2019-08-25 22:15 GMT
திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையில் சம்பவத்தன்று ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக பணம் பெற தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் வங்கி கவுண்ட்டரில் ரூ.16 லட்சத்தை பெற்று அதனை ஒரு பையில் வைத்திருந்த போது கொள்ளைப்போனது. இதுதொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு பெரம்பலூரில் குடிபோதையில் ஒரு பையில் கட்டுக்கட்டாக பணத்துடன் சுற்றிய நபரை பிடித்து ஆட்டோ டிரைவர் முருகையா போலீசாரிடம் ஒப்படைத்தார். இதில் அவர் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் (வயது 42) என்பதும், திருச்சி தனியார் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் அவர் தான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை திருச்சி போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 47 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவரை திருச்சி மத்திய சிறையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அடைத்தனர்.

போலீஸ் காவலில்...

கைதான ஸ்டீபன் மீது ஏற்கனவே திருச்சி பொன்மலை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தஞ்சாவூரில் ஒரு வங்கியில் போலி நகைகளை தங்க நகைகள் என கூறி அடகு வைக்க முயன்று சிக்கியதும் தெரிந்தது. குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதால், மேலும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டீபனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்