தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி நண்பருக்கு தீவிர சிகிச்சை

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக பலியானார். உடன் சென்ற நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-08-25 23:00 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பள்ளித்தெருவை சேர்ந்தவர் பெரோசில்கான், தொழிலாளி. இவரது மகன் நசிப்கான்(வயது 18). இவர் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய நண்பர் திருவிதாங்கோடு செட்டியார்விளையை சேர்ந்த அன்வர்ஷா (18).

இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் தங்களது சக நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபத்துக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை அன்வர்ஷா ஓட்டினார். நசிப்கான் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் நண்பர்களை பார்த்து விட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருவிதாங்கோட்டை அடுத்த லெப்பை தெரு பகுதியில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த காம்பவுண்டு சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே, அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நசிப்கான் பரிதாபமாக இறந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அன்வர்ஷாவை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்