ஏலச்சீட்டு நடத்தி ரூ.46 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.46 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-08-26 22:45 GMT
ஈரோடு,

கரூர் மாவட்டம் சின்னாண்டான் கோவில்தெரு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 52) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் பழனியாண்டவர் வீதியை சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி பாவாத்தாள் ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

அவர்களின் ஏலச்சீட்டில் நாங்கள் உறுப்பினர்களாக சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம். கடந்த 6 மாதங்களாக சீட்டு நடத்துவதை அவர்கள் நிறுத்தி விட்டனர். நாங்கள் செலுத்திய ரூ.46 லட்சத்தை திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் அவர்கள் கூறியது போல் எங்களுக்கு இதுவரை பணம் திருப்பித்தரவில்லை. தற்போது நடராஜன் தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து அவரது மனைவியிடம் கேட்டால், ‘எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் வீட்டுக்கு வருவதில்லை’ என்று கூறி வருகிறார்.

ஆனால் சமீபத்தில் நடராஜன் பல்வேறு இடங்களில் வீடு, நிலம் வாங்கி கிரையம் செய்துள்ளார். எனவே எங்களிடம் ரூ.46 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து தலைமறைவாக உள்ள நடராஜனை கண்டுபிடித்து, எங்களுக்கு சேர வேண்டிய தொகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்