சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகைக்கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகைக்கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-08-26 23:45 GMT
திருப்பூர்,

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பக்கத்து ஊரை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்த 12 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தொல்லை அதிகமாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தாள்.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் மகளிர் போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி, மகேந்திரனின் உறவினர் மகள் ஆவாள்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகேந்திரனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்