தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள 6 யானைகளும் மைசூரு அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டன மந்திரி சோமண்ணா தலைமையில் உற்சாக வரவேற்பு

தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள 6 யானைகளும் நேற்று மைசூரு அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டன. மந்திரி வி.சோமண்ணா தலைமையில் அந்த யானைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-08-26 23:00 GMT
மைசூரு,

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையையொட்டி 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் 29-ந்தேதி தசரா விழாவை கன்னட எழுத்தாளர் பைரப்பா சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு பூக்களை தூவி சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தொடங்கிவைக்கிறார். அதன் பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், திரைப்பட விழா, மலர் கண்காட்சி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. விழாவின் இறுதிநாளான அக்டோபர் 8-ந்தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது.

இந்த ஊர்வலத்தில் தசரா யானைகள் அணிவகுத்து செல்லும். அதைதொடர்ந்து பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள், பல்வேறு கலைக்குழுவினரும் ஊர்வலத்தில் செல்கிறார்கள். இந்த ஜம்புசவாரி ஊர்வலத்தை பார்க்க லட்சக்கணக்கானோர் மைசூருவில் கூடுவார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தசரா விழா ஜம்புசவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்ள கடந்த 22-ந்தேதி 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா, அபிமன்யு, தனஞ்செயா, வரலட்சுமி, விஜயா, ஈஸ்வரா உள்ளிட்ட 6 யானைகளும் மைசூருவுக்கு அழைத்துவரப்பட்டன. அந்த 6 யானைகளும் மைசூரு அசோகபுரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தங்கியிருந்தன.

அந்த யானைகளை மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி 6 யானைகளும் காலையில் குளிப்பாட்டி, யானைகளின் தும்பிக்கைகளில் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு, நெற்றிபட்டைகள் அணிவிக்கப்பட்டன. பின்னர் ஊர்வலமாக 6 யானைகளும் மைசூரு அரண்மனையின் கோட்டை வாசலுக்கு அழைத்து வரப்பட்டது.

அங்கு அரண்மனையின் அர்ச்சக்கர்கள், யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி சம்பிரதாய முறைப்படி யானைகளை அங்கிருந்து அரண்மனையின் பிரதான நுழைவுவாயில் வரை அழைத்துவந்தனர். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் இசையுடன், மேளதாளம் முழங்கப்பட்டது. பின்னர் மந்திரி வி.சோமண்ணா, எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், எல்.நாகேந்திரா, மேயர் புஷ்பலதா ஜெகன்நாத், மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் கே.டி.பாலகிருஷ்ணன், வனத்துறை இயக்குனர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்துகொண்டு யானைகள் மீது பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் யானைகளுக்கு அவர்கள் கரும்பு, வெல்லம், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட கொடுத்தனர். இதையடுத்து மைசூரு அரண்மனை வளாகத்திற்குள் தகரத்தால் அமைக்கப்பட்ட கூடாரங்களில் 6 யானைகளும் அழைத்துச்செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை மைசூருவுக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகளும், பொதுமக்களும் யானைகளை கண்டு ரசித்தனர். மேலும் செல்போனிலும் யானைகள் அருகில் நின்று செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள 6 யானைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபயிற்சி மேற்கொள்கிறது. அதாவது அரண்மனை வளாகத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபம் வரை யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் யானைகளின் எடையளவு கண்டறியும் பணி நடக்கிறது. அதன் பின்னர் எடை குறைவாக இருக்கும் யானைகளின் எடையை அதிகரிக்க ஊட்டசத்து உணவுகள் கொடுக்கப்படும் என்று வனத்துறை இயக்குனர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

மைசூரு தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள 6 யானைகளும் நேற்று மைசூரு அசோகபுரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக மைசூரு அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டன. அப்போது 6 யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.

ஊர்வலத்தின் முன்னாள் பேண்டுவாத்திய குழுவினர், மேளதாளம் முழங்கினர். அப்போது ஈஸ்வரா என்ற தசரா யானை திடீரென்று மிரண்டு அங்குமிங்கும் சென்றது. உடனே யானை பாகன்கள் அந்த யானையை ஆசுவாசப்படுத்தினர். இதனால் ஊர்வலத்தின் போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேள சத்தம் கேட்டு மிரண்ட ஈஸ்வரா யானை, இந்த ஆண்டு தான் முதல் முறையாக தசரா விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்