பால் விற்பனை விலையை உயர்த்தும் எண்ணத்தை கைவிட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

புதுச்சேரி மாநிலத்தில் பால் விற்பனை விலையை உயர்த்தும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-08-26 22:30 GMT
புதுச்சேரி,


மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உணவில் முக்கியமான பொருளாக பால் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் உடல்நிலை பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு அத்தியாவசியமான உணவு பொருளாக பால் உள்ளது. தமிழகத்தில் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டு இருப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி புதுச்சேரியிலும் பால் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டு அதற்கான கோப்புகளை தயாரித்துள்ளது.

பால் விலையை உயர்த்துவதற்கு முன், பாலை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் பாண்லே நிறுவனத்தில் முறைகேடுகளை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்த ஒரு நிறுவனமும் ஆண்டு தணிக்கை அறிக்கை தயார் செய்தால்தான் அந்த நிறுவனம் லாபத்தில் இயங்குகின்றதா? நஷ்டத்தில் இயங்குகின்றதா? என தெரியவரும்.

ஆனால் பாண்லே நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தணிக்கை அறிக்கை தயார் செய்யப்படவில்லை. அதே சமயம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனத்திலும் உற்பத்தி மேலாளரே தரக்கட்டுப்பாட்டு மேலாளராகவும் இருக்கமாட்டார். ஆனால் பாண்லேவில் உற்பத்தி மேலாளரே தரக்கட்டுப்பாட்டு மேலாளராகவும் உள்ளார். பின் எப்படி அவர் உற்பத்தி செய்த பொருட்களில் உள்ள குறைகளை ஒப்புக்கொள்வார்.

அதேபோல் புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு தேவைப்படும் 1.20 லட்சம் லிட்டர் பாலில் பாதி அளவுதான் புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதியுள்ள தேவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கமிஷன் அடிப்படையில் பால் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வளவு தொகையை புதுச்சேரியில் பால் உற்பத்தி செய்பவர்களுக்கு வழங்கினால் ஒரே ஆண்டில் முழு தேவையையும் நமது மாநிலம் எட்டிவிடும்.

1.20 லட்சம் லிட்டர் பாலை கையாளும் பாண்லே நிறுவனத்தில் 1100 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக அலுவலக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு சுமார் 400 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மீதிபேர் எங்கு இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. மாதந்தோறும் சம்பளத்தை மட்டுமே அவர்களது வங்கிக்கணக்கில் பாண்லே செலுத்தி வருகிறது.

இந்த நிர்வாக குறைபாடுகளை சரிசெய்தாலே பால் விற்பனை விலையை உயர்த்தாமல் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தலாம். எனவே பால் விற்பனை விலையை உயர்த்தும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். நிர்வாக குறைபாடுகளை களைந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்