சிதம்பரத்தில், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை கொன்ற 4 பேர் கைது - இரட்டை கொலைக்கு பழிக்குப்பழியாக கொன்றது அம்பலம்

சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

Update: 2019-08-26 23:00 GMT
சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேட்டை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் உள்ளன. கடந்த 20-ந் தேதி இரவு கோழிபாண்டியன் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், கோழிபாண்டியன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரை கொலை செய்தனர்.

இதுதொடர்பாக அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் புவனகிரி அம்பேத்கர், புதுச்சத்திரம் அமுதா, சிதம்பரம் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கோழி பாண்டியன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு திருவேட்குளத்தை சேர்ந்த மணி(65) மகன்களான ஆம்புலன்ஸ் குமார், ராஜேஷ் ஆகியோரை ரவுடி கும்பல் வெட்டிக்கொலை செய்தது. அந்த கொலைக்கு கோழிபாண்டியன் உடந்தையாக இருந்தார். இதனால் பழிக்குப்பழியாக அவரை கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்காக ஆம்புலன்ஸ் குமாரின் தந்தை மணி, மனைவி மஞ்சுளா(34), இவரது உறவினர்கள் வடமூர் சம்பத்குமார் மகன் சரத்(27), கடலூர் முதுநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் ஜெயசீலன்(22), அண்ணாமலைநகர் சக்கரா அவென்யூவை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜா(34) ஆகியோர் காத்துக் கொண்டிருந்தனர். இதற்காக சரத், சோழத்தரம் புறையூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் நாட்டு வெடிகுண்டுகள் வாங்கி தயாராக வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் கோழிபாண்டியன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது பற்றி அறிந்த மணி, சரத் உள்ளிட்டோர் அங்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி அருகே பதுங்கி இருந்த மணி, ஜெயசீலன், ராஜா ஆகியோரையும், முத்தையா நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே பதுங்கி இருந்த மஞ்சுளாவையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சரத், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் செய்திகள்