மதுரையில் பரிதாபம்: பந்தை எடுக்க முயன்று கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவன் சாவு

பந்தை எடுக்க முயன்றபோது கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-08-27 22:45 GMT
மதுரை,

மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவியும், இவரும் அரசு பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஸ்ரீஹரி என்ற மகனும், 1½ வயது பெண் குழந்தையும் இருந்தனர். தம்பதியினர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தான் வீடு திரும்புவார்கள். எனவே குழந்தைகளை தாத்தா, பாட்டி தான் பார்த்து கொள்வார்கள். அந்த பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் ஸ்ரீஹரி 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவன், வெளியே விளையாட சென்றான். வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை என்பதால் அவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

சிறுவனை யாரும் கடத்தி சென்று விட்டார்களா என்று பயந்து பெற்றோர் சுப்பிர மணியபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் அவர்களது வீட்டிற்கு எதிரே உள்ள கழிவுநீர் தொட்டிக்குள்(செப்டிக் டேங்க்) சிறுவன் ஸ்ரீஹரி விழுந்தது தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் பதறியடித்து கொண்டு, தொட்டி இருக்கும் பகுதிக்கு ஓடி சென்று பார்த்தனர். அங்கு சிறுவன் இறந்த நிலையில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் போலீசார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுவன் பந்து விளையாடும்போது அந்த பந்து கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்ற போது சிறுவன் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்துள்ளான் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்