கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக நளின்குமார் கட்டீல் பதவி ஏற்பு ‘கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன்’ என பேச்சு

கர்நாடக மாநில பா.ஜனதா புதிய தலைவராக பதவி ஏற்ற நளின்குமார் கட்டீல், கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன் என்று கூறினார்.

Update: 2019-08-27 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக இருந்தவர் முதல்-மந்திரி எடியூரப்பா. அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதை அடுத்து கர்நாடக பா.ஜனதா கட்சியின் புதிய தலைவராக நளின் குமார் கட்டீல் கடந்த 20-ந் தேதி நியமிக்கப்பட்டார். அவர் கட்சியின் தலைவராக பதவி ஏற்கும் விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக நளின்குமார் கட்டீல் பதவி ஏற்றார். அதன் பிறகு நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-

நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவன். நான் கட்சியின் உண்மையான விசுவாசி. சாதாரண குடும்பத்தை சேர்ந்த என்னை அடையாளம் கண்டு, இவ்வளவு பெரிய பொறுப்பை கட்சி வழங்கியுள்ளது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். பா.ஜனதா கட்சியில் மட்டுமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரிய பதவியை அடைய முடியும் என்பதற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நான் ஆகியோர் சிறந்த உதாரணம். தட்சிண கன்னடா மாவட்டத்தில் நான் ஒரு சாதாரண தொண்டராக இருந்தேன். என்னை அடையாளம் கண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கினர்.

3-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தற்போது எனக்கு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளனர். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எடியூரப்பாவின் வழிகாட்டுதல் படியும், கட்சித் தலைவர்களின் ஆலோசனைப்படியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், கட்சியையும் பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன். பேசத்தெரியாத எனக்கு பேச்சை கற்று கொடுத்ததே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான்.

கட்சியை சரியான முறையில் வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, எடியூரப்பா போன்ற தலைவர்கள் இருக்கும்போது, கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட எனக்கு எந்த அச்சமும் இல்லை. கட்சியின் தொண்டர் படை இருக்கிறது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை மேலும் பலப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன். இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

இதில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், லட்சுமண் சவதி, மந்திரிகள் ஆர்.அசோக், சோமண்ணா, சி.டி.ரவி உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நளின்குமார் கட்டீல் காவி உடையை அணிந்திருந்தார். முன்னதாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மல்லேசுவரத்தில் உள்ள காடுமல்லேஸ்வரா கோவிலில் அவர் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்