பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-27 23:00 GMT
திருச்சி,

நோயாளிகளின் எண்ணிக்கைகளுக்கேற்ப டாக்டர்கள் நியமிக்க வேண்டும். முதுகலை டாக்டர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி திருச்சியில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையில் டீன் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சிறிது நேரத்திற்கு பின் அனைவரும் வெளியே வந்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

மருத்துவ கல்லூரி

அதனைதொடர்ந்து பெரிய மிளகு பாறையில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருளஸ்வரன் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறுகையில், “கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 23-ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அதன் ஒருபகுதியாக வேலை நிறுத்த போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 460 அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிகிச்சை அளித்தோம்” என்றனர்.

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு வழக்கம் போல நடந்தது. மாற்று ஏற்பாடாக மற்றொரு சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் பணியில் இருந்ததால் பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்