பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது

கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-27 23:00 GMT
கும்பகோணம்,

கும்பகோணத்தில் அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராஜேஷ்ராம் தலைமை தாங்கினார். டாக்டர் அருட்செல்வன் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் சரவணன், விமலா, அரசு ஊழியர்கள் சங்க வட்ட தலைவர் விஸ்வேஸ்வரன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்வாணன், நகராட்சி, மாநகராட்சி ஊழியர் சங்க மாநில செயலாளர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை காரணம் காட்டி தமிழகத்தில் உள்ள டாக்டர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது. டாக்டர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது. காலம் சார்ந்த ஊதிய உயர்வு மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ பிரிவில் தமிழக அரசு டாக்டர்களுக்கு இருந்து வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் 42 டாக்டர்களில் 39 பேர் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள்நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.

மேலும் செய்திகள்