மும்பையில் பறக்கும் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது ஏன்? மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

மும்பையில் பறக்கும் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது ஏன்? என மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2019-08-27 23:45 GMT
மும்பை,

மும்பையில் பெருகி வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் கொலபா- பாந்திரா- சீப்ஸ் இடையிலான 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தை தவிர மற்ற அனைத்தும் பறக்கும் வழிப்பாதைகளாகவே(எலவேட்டடு) அமைக்கப்படுகின்றன.

இந்தநிலையில், தகிசர்- மான்கூர்டு இடையே மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்காக மாங்குரோவ் காடுகளை அகற்றுவதற்காக அனுமதி கேட்டு மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம்(எம்.எம்.ஆர்.டி.ஏ.) தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி பிரதீப் நந்தரஜோக், நீதிபதி பாரதி டாங்கரே ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

அப்போது மும்பையில் பறக்கும் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது தொடர்பாக மாநில அரசு மற்றும் எம்.எம்.ஆர்.டி.ஏ.வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

பறக்கும் மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் பொருத்தப்படும் காங்கிரீட் சிலாப்புகள் 40 முதல் 50 ஆண்டுகளில் அதிர்வு காரணமாக பழுதடைந்து விடும் என்பதை ஏன் மாநில அரசு மற்றும் எம்.எம்.ஆர்.டி.ஏ. கவனத்தில் கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

பறக்கும் மெட்ரோ வழித்தட சிலாப்புகள் பழுதடைந்தால் அவற்றை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும். உலகத்தில் உள்ள நகரங்களில் பறக்கும் மெட்ரோ வழித்தடங்களை வேறு எங்கும் நாம் கண்டதில்லை. தரையிலும், பூமிக்கடியிலும் தான் மெட்ரோ வழித்தடங்கள் இருக்கின்றன. பறக்கும் மெட்ரோ வழித்தடங்களில் காங்கிரீட் சிலாப்புகள் பழுதடைந்தால் அவற்றை சரி செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அந்த நேரத்தில் மெட்ரோ ரெயில் எப்படி இயங்கும்? மேம்பாலங்களை போல் சீரமைப்பு பணிக்காக மூடிவிட்டு வேறு வழித்தடத்தில்மெட்ரோ ரெயிலை திருப்பி விட முடியுமா? என்றனர்.

மேலும் இது தொடர்பான கருத்துக்களை கேட்டு தெரிவிக்கும்படி அட்வகேட் ஜெனரல் ஆசுதோஷ் கும்பகோனிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்