கடலூர் முதுநகரில், விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்

கடலூர் முதுநகரில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-27 22:15 GMT
கடலூர் முதுநகர்,

இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு நகரம் மற்றும் கிராமங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.

இதன்படி கடலூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக கடலூர் முதுநகர், மணவெளி, வண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்னவிநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், பாகுபலி விநாயகர், வலம்புரி விநாயகர், குபேரனுடன் இருக்கும் விநாயகர் என பல வித கலைநயத்துடன், பல்வேறு வடிவங்களில் 2 அடி முதல் 12 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிலை வைப்பவர்கள் முன்பதிவு செய்துள்ளதால், விநாயகர் சிலையை செய்து முடிக்க தொழிலாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையால் சிலை செய்யும் பணி பாதிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து வெயில் அடித்து வருவதால் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. மேலும் விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில், குறிப்பாக வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து சிலை தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயார் செய்யும் விநாயகர் சிலைகள் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச்செல்ல உள்ளனர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அவர்கள் கேட்கும் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.

மேலும் செய்திகள்