சங்ககிரி பகுதியில், இருவேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலி

சங்ககிரி பகுதியில் நடந்த இருவேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-08-27 22:30 GMT
சங்ககிரி, 

சங்ககிரி குப்தா செட்டியார் காடு பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் திருச்செங்கோடு பகுதியில் லாரிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வந்தார். கடந்த 25-ந் தேதி மாலை 6.30 மணியளவில் சின்னா கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கலியனூர் ரோடு வழியாக புறவழிச்சாலைக்கு சென்றார்.

அங்கு அந்த சாலையை கடக்கும் போது சேலம் பகுதியில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற கார், நிர்மல்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நிர்மல்குமார் இறந்து விட்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னுசாமி (வயது 65), கொத்தனார். இவர் சின்னா கவுண்டனூர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று இரவு 7.45 மணியளவில் அவர் கருமாபுரத்தானூர் பகுதியில் இருந்து சின்னா கவுண்டனூர் நோக்கி செல்வதற்காக அந்த பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற கார் ஒன்று நடந்து சென்ற சின்னுசாமி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னுசாமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்