கோவை அரசு ஆஸ்பத்திரியில், முதுநிலை மருத்துவ மாணவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி யில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2019-08-27 23:00 GMT
கோவை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜா தலைமை தாங்கினார். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை முடித்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மேலும் ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியிடங்களை குறைப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால் எங்கள் கோரிக்கை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தான் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேலை நிறுத்த போராட்டத்தில் 130 முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காய்ச்சல் சிகிச்சை வார்டு, இதயம், சிறுநீரகம், நரம்பியல், கல்லீரல், ரத்தநாளம், சர்க்கரை நோய், புற்றுநோய், உயர் ரத்த அழுத்த சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து புற நோயாளிகள் பிரிவுகளிலும் குறைந்த அளவிலான டாக்டர்கள் பணியில் இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து நின்று நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இதுதவிர உள்நோயாளிகள் இருக்கும் வார்டுகளிலும் சரியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்