தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கியது போல், போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.6¼ கோடி மோசடி

தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.6¼ கோடி மோசடி செய்தது தொடர்பாக வங்கி மேலாளர், தணிக்கை அதிகாரி உள்பட 2 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2019-08-28 22:30 GMT
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அவர்கள், தொழில் அபிவிருத்திக்காக வங்கிகளில் கடன் பெறுவது வழக்கம். பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் சிண்டிகேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியின் கிளை மேலாளராக தன்ராஜ் என்பவரும், வங்கியின் கணக்கு தணிக்கை அதிகாரியாக சுப்பிரமணியன் என்பவரும் பணியாற்றி வந்தனர். கடந்த 5.5.2014 முதல் 8.6.2016 வரையிலான காலகட்டத்தில் வங்கி மேலாளர் தன்ராஜ், தணிக்கை அதிகாரி சுப்பிரமணியன் ஆகியோர் சேர்ந்து, தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் கடன் பெற்றது போல் போலி ஆவணங்களை தயாரித்தனர்.

மேலும் வங்கியில் அந்த நிறுவனங்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கியது போல் பணத்தை கையாடல் செய்தனர். மொத்தம் 38 நிறுவனங்களின் பெயரில் ரூ.6 கோடியே 35 லட்சம் வரை மோசடி நடைபெற்றது. வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரியே இதற்கு உடந்தையாக இருந்ததால் இந்த மோசடி உடனடியாக தெரியவில்லை.

நீண்ட நாட்களாக கடன் தொகை வசூல் ஆகாததால் இது குறித்து சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது கடன் வாங்கிய தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்களின் முகவரியை தேடிச்சென்றபோது அங்கு யாரும் இல்லை. தென்னை நார் தொழிற்சாலையும் இல்லை. இதனால் அது போலியான முகவரி என்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு 38 நிறுவனங்களின் பெயரில் போலியான முகவரி மூலம் பணத்தை வங்கி மேலாளர் தன்ராஜும், தணிக்கை அதிகாரி சுப்பிர மணியன் ஆகியோரும் மோசடி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வங்கியில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக சிண்டிகேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் சிவராமன் சி.பி.ஐ. போலீசில் புகார் செய்தார்.

சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு மைக்கேல் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் வங்கி மேலாளர் தன்ராஜ், தணிக்கை அதிகாரி சுப்பிரமணியன் ஆகிய 2 பேர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கி அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்