மத்திய அரசு திட்டங்களை விமர்சித்த சேலம் சமூக ஆர்வலர் மீது பா.ஜனதாவினர் தாக்குதல்

மத்திய அரசு திட்டங்களை விமர்சனம் செய்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை பா.ஜனதாவினர் நேற்று தாக்கினர்.

Update: 2019-08-28 22:45 GMT
சேலம்,

சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் பியூஸ் மானுஷ்(வயது 43), சமூக ஆர்வலரான இவர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். மேலும் அவர் இதுதொடர்பாக வாட்ஸ்-அப், முகநூல்(பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதில் சிலவற்றை வீடியோவாகவும் பதிவிட்டார். இந்த முகநூலை பார்த்த சேலத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் இதற்கு தங்களுடைய எதிர்ப்பையும், பதிலையும் தெரிவித்து பதிவிட்டனர்.

பியூஸ் மானுஷ் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதனால் அவருக்கும், பா.ஜனதா நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல் இருந்தது. இந்தநிலையில் இதுபற்றி நேரில் விவாதிப்பதற்காக நேற்று மாலை பியூஸ் மானுஷ் மரவனேரி முதல் கிராசில் உள்ள மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த பா.ஜனதாவினர் அவரிடம், மத்திய அரசின் திட்டங்களை ஏன் குறை தெரிவித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகிறீர்கள்? என்று கேட்டனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது கைகலப்பாக மாறியது. இதற்கிடையில் இந்த சம்பவத்தை பியூஸ் மானுஷ் தனது செல்போன் மூலம் முகநூலில் நேரலை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜனதாவினர் அலுவலகத்தில் கிடந்த செருப்புகளை கயிற்றில் மாலையாக கட்டி பியூஸ் மானுஷின் கழுத்தில் அணிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருடைய செல்போனை பா.ஜனதாவினர் பறித்து கொண்டதுடன் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் முன்னிலையிலும் பா.ஜனதாவினர் பியூஸ் மானுஷை கடுமையாக தாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்து பியூஸ் மானுஷை போலீசார் மீட்டு விசாரணைக்காக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பா.ஜனதா அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையில் பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் தரப்பில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை பியூஸ் மானுஷ் தரக்குறைவாக திட்டியதுடன், பா.ஜனதா அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசினார். மேலும் அங்கிருந்த நிர்வாகிகளை தாக்கிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பா.ஜனதா அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்