தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக சென்ற மாற்றுத்திறனாளிகள் 600 பேர் கைது

மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டு இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-08-29 22:45 GMT
சென்னை,

மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டு இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டிசம்பர் 3, பார்வையற்றோருக்கான தேசிய இணையம், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச்செயலாளர் நம்புராஜன் கூறியதாவது:-

புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமலாக்குவதற்கு இப்போது வரை தனி ஆணையரை அரசு நியமிக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் துறை உயர் அதிகாரிகள் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள். மனு கொடுக்க அலுவலகம் வரக்கூடாது என்கிறார்கள், எங்களை அவமானப்படுத்துகிறார்கள். உரிமை சார்ந்த உத்தரவுகளை ரத்து செய்வதாக மிரட்டுகிறார்கள். எனவே தவறான போக்கில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். உடனே போலீசார் 600-க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் செய்திகள்