மோகனூர் அருகே, மணல் கடத்திய லாரியை பொதுமக்களுடன் எம்.பி. சிறைபிடிப்பு

மோகனூர் அருகே மணல் கடத்திய லாரியை பொதுமக்களுடன் எம்.பி. சிறைபிடித்தார்.

Update: 2019-08-29 22:15 GMT
மோகனூர், 

மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓடப்பாளையம் பகுதியில் நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிப்பர் லாரி மணலையும், ஆவணங்களையும் சோதனை செய்து எத்தனை யூனிட் மணல் உள்ளது? என எடை போட்டு பார்த்தார். இதில் போலி பர்மிட்டுடன் 6 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அந்த லாரியை சிறைபிடித்த எம்.பி. மற்றும் பொதுமக்கள், மோகனூர் போலீஸ் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் திருட்டுத்தனமாக மணல் குவாரி நடைபெறுகிறதா? என பல்வேறு இடங்களில் எம்.பி. பொதுமக்களுடன் சென்று சோதனை செய்தார்.

அவருடன் மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவலடி, சின்னத்தம்பிபாளையம் தர்மகர்த்தா சி.பி.நவலடி, மாவட்ட கொ.ம.தே.க. விவசாய அணி தலைவர் பழனிமலை மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்