மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-30 22:30 GMT
குன்னூர்,

குன்னூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கருப்பன்(வயது 55). இவர் குன்னூர் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். எம்.ஜி.ஆர். நகருக்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான ஆடு, மாடு வதை கூடத்தை சுத்தம் செய்தல், அங்கிருந்து மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு இறைச்சியை வினியோகித்தல் போன்ற பணிகளில் கருப்பன் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வதை கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் கருப்பன் ஈடுபட்டார். பின்னர் தண்ணீருக்காக அங்குள்ள மின்மோட்டாரை இயக்கினார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ, இழப்பீடு வழங்கவோ ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை குன்னூர் டி.டி.கே. சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருப்பனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அம்மாதுரை, முரளி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உடனே இங்கு வர வேண்டும்‘ என்று வலியுறுத்தப்பட்டது. உடனே போலீசார், ‘எழுத்து மூலமாக புகார் கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்