கோபியில் தொழில் அதிபர் காரில் வைத்திருந்த ரூ.10 லட்சம் கொள்ளை: மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கோபியில் தொழில் அதிபர் காரில் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-08-31 22:45 GMT
கடத்தூர்,

கோபி அருகே உள்ள பங்களாப்புதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). இவர் கிரானைட் தொழில் செய்து வருகிறார். சிவக்குமார் நேற்று பகல் 11 மணி அளவில் வங்கியில் பணம் எடுப்பதற்காக காரில் கோபி வந்தார். காரை கோபி எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் அருகே நிறுத்திவிட்டு வங்கியின் உள்ளே சென்று தனது கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் எடுத்தார். பின்னர் அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்து காரின் கதவை திறந்து உள்ளே வைத்தார். அப்போது அந்த வங்கியின் அருகே உள்ள தெருவில் மோட்டார்சைக்கிளுடன் நின்றிருந்த மர்மநபர்கள் 2 பேர் இதனை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி வந்து சிவக்குமாரிடம் சென்று, உங்கள் காரின் பின் டயர் பஞ்சராகி உள்ளது என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அவர் பின் டயரை பார்த்துள்ளார். அப்போது காரின் டயர் ஆயுதத்தால் ஏற்கனவே கிழிக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.

உடனே அந்த நபர் காரின் கதவை திறந்து உள்ளே இருந்த பணப்பையை எடுத்தார். இதைப்பார்த்த சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். “திருடன் திருடன்” என்று கூச்சலிட்டார். அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர் அங்கு தயாராக நின்றிருந்த மோட்டார்சைக்கிளில் ஏறினார். பின்னர் மர்மநபர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

இதுகுறித்து சிவக்குமார் கோபி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் தொழில்அதிபரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்