ஊட்டி ரோஜா பூங்காவில் ரூ.60 லட்சத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி ரோஜா பூங்காவில் ரூ.60 லட்சத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-31 22:30 GMT
ஊட்டி,

ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இயற்கை அழகுடன் அமைந்து உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக உள்நாடு மட்டுமின்றி இங்கிலாந்து, ஜெர்மன், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஊட்டிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

அவர்கள் பெரும்பாலும் சொந்த அல்லது வாடகை வாகனங்களில் வருகின்றனர். இதனால் சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனின் போது, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக ஏற்படும். மேலும் ஊட்டியில் வாகனங்களை நிறுத்த ஆவின், என்.சி.எம்.எஸ்., பழங்குடியினர் பண்பாட்டு மையம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. தற்போது குதிரை பந்தய மைதானத்தில் 1½ ஏக்கர் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தனியார் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பூங்காவுக்கு செல்கின்றனர். ரோஜா பூங்காவில் மினிவேன், மேக்சிகேப், டாக்சி, பஸ் போன்ற சுற்றுலா வாகனங்களை நிறுத்த இடவசதி உள்ளது. இருந்தாலும், கடந்த கோடை சீசனில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு வந்ததால் வாகன நிறுத்துமிடம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. இதனால் மற்ற வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. அதன் காரணமாக சாலையில் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு தோட்டக்கலைத்துறை சார்பில், ரூ.60 லட்சம் செலவில் வாகனங்களை நிறுத்துமிடம் அமைக்கும் பணி ஊட்டி ரோஜா பூங்கா நர்சரி பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நர்சரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்தவும். மண்சரிவு ஏற்படாமல் இருக்கவும் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. புதியதாக அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்துமிடத்தில் கூடுதலாக 200 வாகனங்களை நிறுத்த முடியும். இதன் மூலம் சீசன் காலங்களில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது தவிர்க்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊட்டி ரோஜா பூங்காவில் மலைச்சரிவான பகுதியில் 4 ஆயிரத்து 201 வகைகளை சேர்ந்த ரோஜா செடிகள் உள்ளன. இவை பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குவதால், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. பெரியவர்கள் ஒரு நபருக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் வாகனங்களை நிறுத்த பஸ் ரூ.100, மேக்சிகேப் ரூ.75, கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.40, ஆட்டோவுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்