கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் யாருக்கு வேண்டப்பட்டவர்கள்? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி

வாரியங்களில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாதவர்கள் யாருக்கு வேண்டப்பட்டவர்கள்? என்று அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி எழுப்பினார்.

Update: 2019-08-31 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபால் பேசும்போது அரசை விமர்சித்து பேசினார். குறிப்பாக பட்ஜெட் நிதி செலவிடப்படாதது குறித்து புகார் தெரிவித்தார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

என்.எஸ்.ஜே.ஜெயபால்: கடந்த பட்ஜெட்டில் 65 சதவீத நிதிதான் செலவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் நமச்சிவாயம்: அது மத்திய அரசு திட்ட நிதி. மார்ச் மாதத்தில்தான் அந்த நிதி வந்தது. அப்போது தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அந்த நிதியை இப்போது செலவிடுவோம்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: உங்கள் ஆட்சியில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிகூட 3 தொகுதிகளுக்குத்தான் வழங்கப்பட்டது. அதற்கான லிஸ்ட் என்னிடம் உள்ளது. ஆனால் நாங்கள் எல்லா தொகுதிக்கும் கொடுக்கிறோம்.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: எனது தொகுதிக்கு வரவில்லை.

நாராயணசாமி: நீங்கள் கையெழுத்திட்டு கொடுத்த அனைவருக்கும் கொடுத்துள்ளோம்.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: காமராஜர் மணிமண்டபத்தை எப்போது திறப்பீர்கள்?

அமைச்சர் நமச்சிவாயம்: நீங்கள் பாக்கி வைத்துவிட்டு சென்றதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். எங்களை குறைசொல்லும்போது, நீங்கள் செய்த தவறை சுட்டிக்காட்டும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: நீங்கள் பாக்கி வைத்ததை சொல்லமாட்டீர்களா?

அமைச்சர் நமச்சிவாயம்: எங்களால் முடிந்தவரை சொல்கிறோம்.

சிவா: நீங்கள் இருவரும் மட்டுமே பேசுகிறீர்கள். இடையில் நாங்களும் இருக்கிறோம்.

அமைச்சர் கந்தசாமி: உங்கள் ஆட்சியில் வாரியங்களுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்கள் கொடுத்த கடன் எதுவுமே திருப்பி வரவில்லை. அதனால் தற்போது புதிதாக கல்விக்கடன் கொடுக்க முடியவில்லை.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: 3 வருடமாக இதையேதான் சொல்கிறீர்கள்.

அமைச்சர் கந்தசாமி: இதுதொடர்பாக விசாரணை வைக்கலாமா?

விசாரணையை சந்திக்க தயார்

அமைச்சர் நமச்சிவாயம்: எத்தனை பேர் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் உள்ளனர்? அவர்கள் யாருக்கு வேண்டப்பட்டவர்கள்?

அமைச்சர் கந்தசாமி: பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தில் வழங்கப்பட்ட கடன் தொடர்பாக விசாரணை வைக்கலாம்.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: தவறு நடந்து இருந்தால் செய்யுங்கள்.

நாராயணசாமி: ஊழல் நடந்ததை ஏற்கிறீர்களா?

என்.எஸ்.ஜே.ஜெயபால்: விசாரணையை சந்திக்க தயார்.

விஜயவேணி (காங்): கடனை வசூல் செய்ய தகுந்தவர்களிடம் கொடுத்தால்தான் வசூலிக்க முடியும். ஆனால் யார்யாரோ பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அப்பாவி மக்களுக்கு நோட்டீஸ் வருகிறது.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் நிதி பெற்று கடன் வழங்கினோம்.

நியமன எம்.எல்.ஏ.க்கள்

அமைச்சர் கந்தசாமி: அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது. பணம் வாங்கி வந்தீர்கள். பாரதீய ஜனதா ஆட்சியில் எவ்வளவு வாங்கி வந்தீர்கள்? நாங்கள் கூட மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது உங்கள் ஆட்சியில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க கேட்டோம். ஆனால் மாநிலத்தில் நடப்பது என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் மாநில அரசுக்கு எதிராக நியமிக்க அப்போதைய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மறுத்துவிட்டார்.

அன்பழகன்: கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ. இல்லாத பலர் வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் முறைகேடு செய்தார்கள். இப்போது அவர்கள் எல்லாம் காங்கிரசில் ஐக்கியமாகிவிட்டார்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்