ஆறுமுகநேரியில் 11 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை

ஆறுமுகநேரியில் 11 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2019-08-31 21:30 GMT
ஆறுமுகநேரி, 

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் 11 அடி உயர வீர விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் வீர விநாயகர் சிலையை லோடு ஆட்டோவில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று, ஆறுமுகநேரி மெயின் பஜாரில் பிரதிஷ்டை செய்தனர்.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கசமுத்து, ஒன்றிய தலைவர் ராமசாமி, பொதுச்செயலாளர் ஜெகன், நகர தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள 25 அம்மன் கோவில்கள் மற்றும் 30-க்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பின்னர் விநாயகர் சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) ஆறுமுகநேரி மெயின் பஜாரில் இருந்து 108 விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று, திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 50-க்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்து விநாயகர் சிலைகளையும் வாகனங்களில் ஏற்றி, உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் பள்ளி முன்பு கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை மெயின் பஜார், தெற்கு பஜார், கொட்டங்காடு, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று குலசேகரன்பட்டினம் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

இதேபோன்று உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நாளை (திங்கட்கிழமை) 30-க்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து விநாயகர் சிலைகளையும் வாகனங்களில் ஏற்றி, உடன்குடி மெயின் பஜாரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பஜார், தைக்காவூர், பரமன்குறிச்சி வழியாக சென்று, திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 40-க்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து விநாயகர் சிலைகளையும் வாகனங்களில் ஏற்றி, உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் பள்ளி முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு குலசேகரன்பட்டினம் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

மேலும் செய்திகள்