விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள்-பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திண்டுக்கல்லில் நேற்று சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.

Update: 2019-09-01 23:00 GMT
திண்டுக்கல், 

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முக்கிய இடங்களில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் வீடுகளிலும் சிறிய அளவில் விநாயகர் சிலையை வைத்து மக்கள் வழிபாடு நடத்துவார்கள்.

இந்த வழிபாட்டில் பலவித பூக்களுடன், விநாயகருக்கு பிடித்த அவல், பொறி, கொழுக்கட்டை மற்றும் பல்வேறு வகையான பழங்களும் இடம்பெறுவது உண்டு. இதனால் சதுர்த்தி விழா பூஜைக்கு தேவையான பொருட்களை மக்கள் நேற்றே வாங்கத் தொடங்கினர்.

இதற்காக நேற்றைய தினம் வழக்கமான சந்தைகளில் மட்டுமின்றி சாலையோரங்களில் கூட புதிதாக பழக்கடைகள் முளைத்திருந்தன. அவற்றில் ஆப்பிள், ஆரஞ்சு, விளாம்பழம், கொய்யா, மாம்பழம், திராட்சை உள்பட பல்வேறு வகையான பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல் அவல், பொறி, கடலை மற்றும் தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் தள்ளுவண்டிகளில் விற்கப்பட்டன.

இந்த கடைகளில் மக்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் விதவிதமாக விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலைகளையும் மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். இதனால் திண்டுக்கல் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.

அதேநேரம் ஒரேநேரத்தில் மக்கள் அதிக அளவில் குவிந்ததால், பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஆப்பிள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரையும், ஆரஞ்சு ரூ.140-க்கும், விளாம்பழம் ரூ.60-க்கும், மாம்பழம் மற்றும் கொய்யா தலா ரூ.70-க்கும், திராட்சை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுதவிர கடந்த வாரம் ரூ.10-க்கு விற்ற தேங்காய் நேற்று ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே இன்றும் மக்கள் பூஜை பொருட்களை வாங்குவார்கள். இதனால் பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்