நாட்டறம்பள்ளியில் வக்கீல் வீட்டில் பெண்கள் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து கொள்ளை - தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி

நாட்டறம்பள்ளியில் வக்கீல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்கள் மீது ‘மயக்க ஸ்பிரே’ அடித்து பணம் மற்றும் வாகனத்தை மர்மநபர்கள் துணிகரமாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Update: 2019-09-01 22:15 GMT
நாட்டறம்பள்ளி

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பி.பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 40), வக்கீல். இவர், நாட்டறம்பள்ளி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர எழுத்தராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய வீடு 2 அடுக்குமாடி கொண்டது.

கீழ் தளத்தில் அவருடைய குடும்பத்தினரும், மேல் தளத்தில் சிவராமனும் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கீழ் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது ‘மயக்க ஸ்பிரே’வை அடித்து விட்டு, அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்து ரூ.60 ஆயிரம் மற்றும் வெளியே இருந்த மொபட்டை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

நேற்று காலையில் எழுந்த போதுதான் பீரோ உடைக்கப்பட்டிருந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. நள்ளிரவில் அயர்ந்து தூங்கியவர்கள் தங்கள் மீது ‘மயக்க ஸ்பிரே’ அடிக்கப்பட்டதையும் எழுந்த பின்னர்தான் அவர்களால் உணர முடிந்தது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசில் சிவராமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளை நடந்த ஊர் திருப்பத்தூர் அருகே உள்ளது. அங்கு லக்கியநாயக்கன்பட்டி என்ற இடத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீரபத்திரன் வீட்டில் கடந்த 27-ந் தேதி கொள்ளை நடந்தது. தடுக்க முயன்ற சலூன் தொழிலாளி வெங்கடேசனை கொள்ளையர்கள் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர்.

மறுநாளும் அதே கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரது வீட்டில் கொள்ளை நடந்தது. வெளியே சென்றிருந்த அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சமையலறையில் இருந்த சாப்பாட்டை கறிக்குழம்புடன் தின்று தீர்த்து விட்டு சைக்கிளை திருடிக்கொண்டு தப்பினர்.

இப்போது இதே பகுதியில் வக்கீல் வீட்டில் நுழைந்து பெண்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்து பணத்துடன் மொபட்டையும் கொள்ளையடித்ததால் வீரபத்திரன் மற்றும் முரளி வீட்டில் கொள்ளையடித்த கும்பல்தான் இங்கும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். தொடர்சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்